தனியார் மயமாக்கலை கண்டித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம். வங்கி பணிகள் முடங்கும் ஆபத்து

408

நாடு முழுவதும் பத்து லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று மேற்கொள்ள உள்ள வேலைநிறுத்தத்தால் வங்கிப்பணிகள் முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
வங்கிகளை தனியார் மயமாக்கக் கூடாது, பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகளை இணைக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 12 மற்றும் 13-ந்தேதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் அறிவித்து இருந்தது. இதற்கு டெல்லி உயர் நீதிமன்றம் தற்காலிக தடை விதித்ததால் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், கோரிக்கைகள் குறித்து தொழிலாளர் நலத்துறை தலைமை ஆணையருடன் வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து, அறிவித்தப்படி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதனால், 1500 கோடி ரூபாய் அளவிற்கு பண பரிவர்த்தனை பாதிக்கப்படும் என வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம் தெரிவித்தார்.இந்த வேலைநிறுத்தத்தில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளைச் சேர்ந்த பத்து லட்சம் ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்றும் வெங்கடாச்சலம் தெரிவித்தார்.