பஞ்சாப் நேஷனல் வங்கியின் சுவற்றில் துளையிட்டு பணம், நகை கொள்ளை

192

சமயபுரம் அருகே பஞ்சாப் நேஷனல் வங்கியின் சுவற்றில் துளையிட்டு 5 கிலோ தங்கம் மற்றும் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளை செயல்பட்டு வருகிறது. வழக்கம்போல் வங்கிப் பணியை முடித்துவிட்டு கடந்த 25-ம் தேதி வங்கியை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்பதால் இன்று காலை வங்கி ஊழியர்கள் வங்கியின் பூட்டை திறந்து உள்ளே சென்றுள்ளனர். அங்கு லாக்கர் பகுதியில் உள்ள சுவற்றில் துளையிட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறை கண்காணிப்பாளர் ஜியா உல் -ஹக் மற்றும் DIG லலிதா லட்சுமி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் சி.சி.டி.வி. கேமரா காட்சிப் பதிவுகளைக் கொண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் 5 லாக்கர்கள் உடைக்கப்பட்டிருப்பதாகவும், இவற்றில் சுமார் 5 கிலோ எடையுள்ள தங்க நகைகள், ரொக்கப்பணம் மற்றும் ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. கொள்ளைக்கு பயன்படுத்திய, கேஸ், வெல்டிங் மிஷின் மற்றும் முகமூடிகளை கொள்ளையர்கள் அங்கேயே விட்டுச் சென்றுள்ளனர்.