விடிய விடிய கொட்டிய மழை: பெங்களூரு நீரில் மூழ்கியது டெல்லி-குர்கான் ஸ்தம்பித்தது 24 கி.மீ தூரம் போக்குவரத்து முடங்கியது

308

டெல்லி ,ஜூலை. 30–
கர்நாடகா, டெல்லி, அரியானா, பீகார், அஸ்ஸாம் உள்ளிட்ட வட-தென் மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கடந்த 4 நாட்களாக விடிய விடிய கொட்டித் தீர்த்த மழையால் பெங்களூரு நகரம் நீரில் மூழ்கியுள்ளது. டெல்லி – குர்கான் நெடுஞ்சாலையில் மழை வெள்ளம் தேங்கி போக்குவரத்து ஸ்தம்பித்தது.
பெங்களூரு மூழ்கியது
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பருவமழை பெய்து வருகிறது. பெங்களூரில் கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவிற்கு கனமழை விடிய விடிய கொட்டித் தீர்த்துள்ளது. கடந்த 4 நாட்களாக இரவு நேரங்களில் தொடங்கி விடிய விடிய பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் ஏரிகள் நிரம்பி தடுப்புகள் உடைந்து 500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. 10க்கும் மேற்பட்ட படகுகளில் அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டில் முடங்கி கிடக்கும் சூழல்நிலை உருவானத்துடன் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு சர்வதேச விமான நிலைய சாலை பகுதியில் 1.6 செமீ மழையும், பெங்களூரு நகர பகுதியில் 4 செமீ மழையும் பதிவானது. பண்ணேர்கட்டா சாலை மற்றும் விமான நிலையம் இடையே சாலைகளிலும் தெருக்களிலும்,வெள்ள நீர் கரை புரண்டோடுவதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். வெள்ள நீரில் பாம்புகள் மிதந்து வந்ததால் மக்கள் பீதி அடைந்தனர்.
கோடிசிக்கனஹள்ளி, அக்ஷயா நகர், யமலூர், அரகிரே லே அவுட் , கரியமன்னா அரஹரா உள்ளிட்ட பகுதிகள் கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சிவாஜிநகர், கெங்கேரி, பாபுஜிநகர், பிலேகாஹள்ளி, பனசங்கரி, பசவன்குடி, எஸ்எஸ்ஆர் லே அவுட் உள்ளிட்ட பல இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது. 6 இடங்களில் பழைய கட்டிடங்களும், சாலையோரம் இருந்த 120 மரங்களும் சாய்ந்தன. இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோ உள்ளிட்ட எண்ணற்ற வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கின. தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் குழுவினர் படகு மூலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். மேலும் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இதற்கிடையே பெங்களூருவில் அடுத்த மூன்று நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
டெல்லி – குர்கான் ஸ்தம்பித்தது
பெங்களூரைப் போலவே, டெல்லி, அரியானா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களையும் கனமழை மிரட்டி வருகிறது. விடாமல் பெய்து வரும் கனமழையால் டெல்லி சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. அரியானா மாநிலத்தின் குர்கான் நகரின் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. டெல்லியிலிருந்து அரியானா செல்லும் குர்கான் நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது. அந்நகரில் 64மி.மீ மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, இருசக்கர வாகனங்கள், கார்கள் வெள்ள நீரில் மிதந்து சென்றன. டெல்லி-குர்கான் சாலையில் சுமார் 24 கி.மீ தூரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. அங்கிருந்து மீண்டு செல்ல வாகன ஓட்டிகள் 4 முதல் 8 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. அலுவலகத்திற்கு சென்ற பலர் நள்ளிரவுக்கு மேல் தான் வீடு திரும்பினர். பலர் காரை அங்கேயே விட்டுவிட்டு சென்றனர். சாலைகளின் இரு புறம் நிறுத்தி வைக்கப்படிருந்த ட்ரக்குகள் மற்றும் பாதாள சாக்கடை முறையாக பராமரிக்கப்படாததால் சாலைகளில் நீர் தேங்கியதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க டெல்லியில் இருந்து குர்கானுக்கு யாரும் வாகனம் மூலம் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
கமிஷனர் இடமாற்றம்

இந்நிலையில், கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் குறித்து ஆலோசனை செய்ய அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் சண்டிகாரில் அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். அந்த கூட்டத்தில் கனமழை மற்றும் போக்குவரத்து நெரிசலால் பெரிதும் பாதிக்கப்பட குர்கான் பகுதியின் காவல்துறை ஆணையாளர் நவ்தீப் சிங்கை இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். அவருக்கு பதிலாக சந்தீப் க்ரிவார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே வெள்ள ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க விரிவான அறிக்கை சமர்பிக்குமாறு மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி உத்தரவிட்டுள்ளார்.