ராமேஸ்வரம் – அயோத்தி ரயில் சேவை தொடக்கம்.

780

ராமேஸ்வரத்தை அடுத்த மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிரதமர், ராமேஸ்வரம் தனுஷ்கோடி சாலை, ராமேஸ்வரம் – அயோத்தி ரயில் சேவையை தொடங்கி வைத்தார்.
பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் நினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, பின்னர் மண்டபத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். வரவேற்புரை ஆற்றிய வெங்கைய்யா நாயுடு, அப்துல் கலாமின் கனவுகளை பிரதமர் மோடி நிறைவேற்றி வருவதாக குறிப்பிட்டார்.
பின்னர் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அப்துல் கலாம் மணி மண்டபத்தை திறந்து வைத்த பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். தமிழக மீனவர்களின் வாழ்வில் அமைதி இல்லை என்று குறிப்பிட்ட அவர், அவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து, ஆழ்கடலில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர், 5 பயனாளிகளுக்கு அதற்கான அனுமதி கடிதத்தை வழங்கினார். பசுமை ராமேஸ்வரம் திட்டத்தை தொடங்கி வைத்த அவர், ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்திக்கு புதிய ரயில் சேவையை கொடி அசைத்து துவக்கி வைத்தார். தனுஷ்கோடி – அரிச்சல்முனை இடையே அமைக்கப்பட்டுள்ள புதிய சாலையை மோடி அர்ப்பணித்தார்.
பின்னர் தமிழில் தனது உரையை தொடங்கிய பிரதமர், ராமேஸ்வரத்தின் பெருமை, அப்துல் கலாமின் அருங்குணங்களை எடுத்துக் கூறினார். நாட்டு மக்கள் தனது பின்னால் இருப்பதால் மத்திய அரசு சிறப்பாக இருப்பதாக கூறினார். ஜெயலலிதா இல்லாமல் இருப்பது வருத்தும் அளிப்பதாக தெரிவித்த மோடி, மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறினார்.