ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் காவிரி ஆற்றில் நீராடி வழிபாடு..!

316

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி வழிபட்டனர்.

ஆண்டுதோறும் ஆடி மாதம் 18 ஆம் தேதியன்று, காவிரி பாய்ந்து செல்லும் பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். கர்நாடகாவில் பெய்த கனமழையால், நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் உற்சாகம் அடைந்துள்ள மக்கள், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பாய்ந்தோடும் காவிரி ஆற்றில் புனித நீராடி வழிபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, நாகை மாவட்டம் மயிலாடுதுறை, பரமத்தி வேலூர் காவிரி ஆறு, ஜேடர்பாளையம் படுகை அணையில் பொதுமக்கள் புனித நீராடி மகிழ்ந்தனர். மேலும் காவிரி நதியை ஆராதிக்கும் விதமாக வளையல், காப்பரிசி, கண்ணாடி, பழவகைகளை படையலிட்டு ஏராளமான பெண்கள் வழிபட்டனர். இதேபோன்று, கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றங்கரையில் ஏராளமான புதுமண தம்பதிகள் புனித நீராடி ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர்.

முளைப்பாரி எடுத்தும், பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட பழங்களை படையலிட்டும் திரளான பெண்கள் வழிபட்டனர். திருவாரூர் மாவட்டம் தியாகராஜ சுவாமி கோயிலில் அமைந்துள்ள கமலாலயத் திருக்குளத்தில் ஏராளமான பெண்கள் பூ, பழங்கள், மஞ்சள் கயிறு ஆகியவற்றை படைத்து வழிபட்டனர். ஈரோடு மாவட்டத்தில் மூன்று நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை ஆற்றில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த லட்சகணக்கான பக்தர்கள் நீராடி, சங்கமேஸ்வரரை வழிபட்டனர். திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாண்டபம் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட ஏராளமான பொதுமக்களும் புதுமண தம்பதிகளும் குவிந்தனர்.வாழை இலையில் தேங்காய், அரிசி, வெல்லம், பழங்கள் ஆகியவற்றை படைத்து காவிரி நதிக்கு தீபாராதனை காட்டி வழிபட்டனர்.

இதில் திருமணம் ஆகாத பெண்கள் கழுத்தில் மஞ்சள் கயிறை கட்டுக் கொண்டு தங்கள் நேர்த்திகடனை செலுத்தினர். இதேபோன்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடி உள்ளதால், வழக்கத்திற்கு மாறாக லட்சகணக்கான மக்கள் காவிரி ஆற்றங்கரையில் புனித நீராடி வழிபட்டனர். விழாவில் அசம்பாவிதங்கள் நடப்பதை தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் சார்பில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.