ஆத்தூரில் பரபரப்பு: தொழில் அதிபரை கடத்தி ரூ.20 லட்சம் பறிப்பு! பெண் உள்பட 15 பேர் கும்பலுக்கு வலைவீச்சு!!

211

ஆத்தூர், ஜூலை. 23–
ஆத்தூரில் தொழில் அதிபரை கடத்தி ரூ.20 லட்சம் பறித்து சென்ற பெண் உள்பட 15 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் அழகாபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (45). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கடந்த 14–ந் தேதி ராஜ்குமார் கடைக்கு விஜயா (40) என்ற பெண் வந்தார். ஆத்தூரில் உள்ள முக்கிய பிரமுகர் ஒருவரின் வீட்டுக்கு 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டுக்கு கண்ணாடிகள் தேவை. வீடு கட்டும் உரிமையாளர் 16–ந் தேதி ஆத்தூர் வருகிறார். அன்றைக்கு அங்கு வந்தால் அவரை சந்தித்து உறுதி செய்து கொள்ளலாம் என்றார்.
இதையடுத்து ராஜ்குமார் 2 கடை பணியாளர்கள் மற்றும் ஓட்டுனருடன் காரில் ஆத்தூர் வந்தார். ஆத்தூர் புறவழிச் சாலையில் நின்று கொண்டிருந்த விஜயா உள்பட 15 பேர் ராஜ்குமாரையும், அவருடன் வந்த 3 பேரையும் திடீரென காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். பின் ராஜ்குமாரை குடோனில் அடைத்து ரூ.2 கோடி கேட்டு துன்புறுத்தினர்.
அப்போது அவர் ரூ.15 லட்சம் தருவதாக கூறினார். அதன்படி 17–ந் தேதி சேலம் உடையாபட்டி பெட்ரோல் பங்க் எதிரே விஜயா தரப்பினர் ராஜ்குமாரின் நண்பரிடம் ரூ.15 லட்சம் பெற்றனர். மீண்டும் 10 லட்சம் ரூபாய் விஜயா கேட்டதால் மறுநாள் அதே இடத்தில் ரூ.5 லட்சம் கொடுத்தனர்.
பின்னர் 18–ந் தேதி தர்மபுரி புறவழிச்சாலையில் ராஜ்குமார் உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து அந்த கும்பல் தப்பியது. இதுகுறித்து சேலம் எஸ்.பி. அலுவலகத்தில் ராஜ்குமார் நேற்று புகார் கொடுத்தார்.
இதையடுத்து எஸ்.பி. தலைமையில் 3 தனிப்படை அமைத்து 15 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.