அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கூடுதல் வசதி செய்து தரப்படும் – தலைமை செயலாளர் சண்முகம்.

139

அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கூடுதல் வசதி செய்து தரப்படும் என தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.

முதலமைச்சர் பழனிசாமி அறிவுறுத்தலின்பேரில், காஞ்சிபுரம் சென்ற தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் காவல்துறை டிஜிபி திரிபாதி ஆகியோர், வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு சென்று அத்திவரதர் தரிசனத்துக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு செய்து தர வேண்டிய வசதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து தலைமை செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சண்முகம், பக்தர்களுக்கு கூடுதலாக கழிவறைகள் அமைக்கவும், பக்தர்களுக்கு தண்ணீர், பிஸ்கட் வழங்க முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். பக்தர்கள் செல்லும் இடங்களில் கூடுதல் மின் விசிறிகளையும் பொருத்தவும் வழிநெடுகிலும் வழிகாட்டி பலகைகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்த வரைபடங்கள் வைக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். பக்தர்கள் இடையே கூட்ட நெரிசலை தவிர்க்க, ஆயிரம் ஊர்க்காவல் படையினர் 3 சுழற்சியாக 24 மணிநேரமும் பணிபுரிவார்கள் என்று கூறிய சண்முகம், விடுமுறை நாட்களில் அத்திவரதரை தரிசிக்க கூடுதலாக ஒரு மணி நேரம் முன்னதாக நடை திறக்க இந்து அறநிலையத்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், வருங்காலங்களில் கூடுதலாக பக்தர்களுக்கு வசதிகள் செய்துதரப்படும் என்றும் தெரிவித்தார்.