நாடாளுமன்றம் அடிக்கடி முடக்கப்படுவதை மக்கள் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை எம்.பி.க்கள் உணர வேண்டும் என்று மக்களவைத் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவுறுத்தியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர், அமளி காரணமாக அவை ஒத்திவைக்கப்படும்போது என் மனம் பாதிக்கப்படுவதுடன், மிகுந்த வேதனை அடைகிறேன் என்றார். நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்திச் செல்வதில் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் பொறுப்பு உண்டு என்று சுட்டிக் காட்டினார். மக்கள் தங்களை கண்காணித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை எம்.பி.க்கள் உணர வேண்டும் என கூறிய சுமித்ரா மகாஜன், மக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு உரிய முடிவை எடுப்பார்கள் என்று தெரிவித்தார். மேலும் நாடாளுமன்றத்திலும், மாநில சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை, கண்ணியமான முறையில் நிறைவேற்றுவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.