சென்னையை குடிசையற்ற மாநகரமாக மாற்றுவதே அரசின் நோக்கம் – துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

336

சென்னையை குடிசையற்ற மாநகரமாக மாற்றுவதே தமிழக அரசின் நோக்கம் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. வாகை சந்திரசேகர், சோளிங்கநல்லூர், கண்ணகிநகர், பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சென்னை மக்கள் அதிக அளவில் குடியமர்த்தப்பட்டு வருவதாக கூறினார். குடிசை மாற்று வாரியத்தின் மூலம் குடியமர்த்தப்படும் அவர்களுக்கு எந்த வசதியும் இல்லாத சூழ்நிலை இருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இதற்கு பதிலளித்து பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சென்னையை குடிசையற்ற மாநகரமாக மாற்றுவதே அரசின் நோக்கம் என குறிப்பிட்டார். குடிசைப்பகுதி மக்களை குடியிருப்புகளுக்கு மறுகுடியமர்த்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறிய அவர், கூவம் நதிக்கரையோர குடிசைப்பகுதி மக்களுக்கு பெரும்பாக்கத்தில் 20 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருவதாக தெரிவித்தார். பள்ளிகள் உட்பட அடிப்படை வசதிகளுடன் கூடிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதாகவும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.