புதுச்சேரி சட்டப்பேரவையில் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் மசோதா நிறைவேற்றம்..!

257

புதுச்சேரி சட்டப்பேரவையில் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் மசோதா நிறைவேற்றப்பட்டது.

புதுச்சேரியில், 2018 – 2019 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை முதல்வர் நாராயணசாமி கடந்த மாதம் 2-ம் தேதி தாக்கல் செய்தார். இதனையடுத்து கடந்த 19ம் தேதி அனைத்து துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்றது. ஆனால் நிதி மசோதாவுக்கு புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்காததால் பேரவை ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து மத்திய அரசு நியமித்துள்ள பா.ஜ.க எம்.எல்.ஏக்களை அனுமதித்து நிதி மசோதாவை நிறைவேற்றிக் கொள்ளலாம் என என்ற நிபந்தனையுடன் ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்தார்.

இதன்படி இன்று மீண்டும் சட்டப்பேரவை கூடியது. அப்போது 2018-ம் ஆண்டுக்கான நிதிஒதுக்கீடு மசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. பேரவையில் எதிர்க்கட்சியினர் வரிசையில் ஒதுக்கப்பட்ட இடத்தில் பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் அமர்ந்திருந்தனர். உச்சநீதிமன்றம் உத்தரவுப்படியே நியமன எம்.எல்.ஏக்கள் பேரவைக்குள் அனுமதிக்கப்பட்டதாக சபாநாயகர் வைத்தியலிங்கம் விளக்கம் அளித்தார். இருப்பினும் விவாதம் இன்றி பட்ஜெட் மசோதா நிறைவேறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். பட்ஜெட் மசோதா நிறைவேறிய பின் சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.