18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்..!

755

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில், இன்று மாலை கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்குகிறது. கடந்த ஆண்டைப்போல, இந்தாண்டும் இந்திய வீரர்கள் சாதிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மாலை தொடங்குகிறது. இந்தியா, சீனா, ஜப்பான், நேபாளம் என ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 45 நாடுகள் இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்கின்றன. இன்று மாலை 5.30 மணிக்குக் கலை நிகழ்ச்சிகளுடன் போட்டிகள் தொடங்குவதை அடுத்து, ஜகார்தா நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. தொடக்க விழா அணிவகுப்பில், ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, இந்திய தேசியக்கொடியை ஏந்திச்செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க விழா இன்று மாலை முடிந்த பின், நாளை முதல் போட்டிகள் நடைபெறும்.

இதில், 462 பிரிவுகளின் கீழ், 40 விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகளில், தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம், நீரஜ் சோப்ரா, சாய்னா, பிவி சிந்து போன்ற முன்னணி வீரர்கள் உட்பட மொத்தம் 542 இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர். கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், 14 தங்கம், 17 வெள்ளி, 34 வெண்கலம் என மொத்தம் 65 பதக்கங்களை இந்தியா வென்று, அதிக பதக்கங்களை கைப்பற்றிய சாதனையை படைத்தது. இந்த நிலையில், இந்த ஆண்டும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் சாதிப்பார்களா? என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.