சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சாமியார் ஆசாராம் பாபுவை குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு.

1394

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சாமியார் ஆசாராம் பாபுவை குற்றவாளியாக அறிவித்து ஜோத்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆசிரமங்களை நடத்தி வந்தவர் சாமியார் ஆசாராம் பாபு. இந்த நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாஜஹான்பூர் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர், ஆசிரமத்தில் தங்கி படித்துவந்த போது ஆசாராம் பாபு தன்னை கற்பழித்து விட்டதாக போலீசில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில், சாமியார் ஆசாராம் பாபு உள்ளிட்ட 5 பேரை போக்ஸோ சட்டத்தின் கீழ் 2013 ஆம் ஆண்டு கைது செய்த போலீசார், ராஜஸ்தான் மாநிலம் உள்ள ஜோத்பூர் சிறையில் அடைத்தனர். கடந்த நான்காண்டுகளாக ஜோத்பூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி மதுசூதன் சர்மா தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இன்று காலை ஜோத்பூர் சிறைக்கு சென்ற நீதிபதி, சாமியார் ஆசாராம் பாபு மற்றும் இந்த குற்றத்தில் தொடர்புடைய சிவா, சரத், பிரகாஷ் உள்ளிட்ட 5 பேரை குற்றவாளி என அறிவித்து தீர்ப்பளித்தார். இவர்களுக்கான தண்டனை விபரங்கள் மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார். தீர்ப்பை தொடர்ந்து ராஜஸ்தான், குஜராத், அரியானா மாநிலங்களில் அசம்பாவீதங்கள் ஏற்படாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே, ஜோத்பூர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக ஆசாராம் பாபுவின் ஆசிரம நிர்வாகம் அறிவித்துள்ளது.