ராகுல், சோனியாவைப் போல என்னை அச்சுறுத்த முடியாது டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஆவேசம்

182

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தி ஆகியோரைப்போல என்னை பிரதமர் நரேந்திரமோடி அச்சுறுத்த முடியாது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.
தண்ணீர் லாரிகள் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் விசாரிக்கப்படுவர் என்று டெல்லி லஞ்ச ஒழிப்புத்துறை தலைவர் எம்.கே.மீனா தெரிவித்திருந்தார்.
இப்பின்னணியில் டெல்லியில் செய்தியாளர்களிடம் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நேற்று கூறியதாவது-
பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிராக திங்கட்கிழமை கட்டுரையில் வெளியிட்டேன். இதைத் தொடர்ந்து தண்ணீர் லாரிகள் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக எனக்கு எதிராக முதல் தகவல் அளிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டுள்ளது.
மோடி எனது அலுவலகத்தில் சி.பி.ஐ.யை கொண்டு 6 மாதங்களுக்கு முன் திடீர் சோதனை நடத்தினார். ஆனால், எந்த ஆவணங்களும் கிடைக்கவில்லை. சி.பி.ஐ. சோதனைக்கு எதிராக நீதிமன்றமும் ஆட்சேபனை வெளியிட்டு கண்டித்துள்ளது.
சி.பி.ஐ. சோதனையைப் போல தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள எப்.ஐ.ஆரும் போலியானதாகும். இந்த எப்.ஐ.ஆர். மூலம் கிடைக்கப்போவது ஒன்றுமில்லை. சோதனைகள், பொய் வழக்குகள், மிரட்டல்கள் ஆகியவற்றின் மூலம் மக்களை மோடி அரசு அச்சுறுத்தி வருகிறது.
ஆனால் நான் மட்டுமே பாறை போல உறுதியாக நின்று மோடி அரசுக்கு எதிராக குரல் எழுப்பி வருகிறேன். போராடி வருகிறேன். அதனால்தான் என்னை மிரட்டவும், பயமுறுத்தவும், தகர்க்கவும் மோடி விரும்புகிறார். ஆனால், என்ன செய்தாலும் நான் வளைந்து கொடுக்கவோ, உடைந்து போகவோ, பின்வாங்கவோ மட்டேன்.
என்னை அச்சுறுத்தி பார்க்க நான் ராகுல் காந்தியோ, சோனியா காந்தியோ அல்ல. ரகசிய உடன்பாடு செய்து கொள்ள நான் ராபர்ட் வதேராவும் அல்ல. நான் நேர்மையற்ற செயல்களில் ஈடுபட மாட்டேன். எத்தனை முறை வேண்டுமானாலும், சி.பி.ஐ. லஞ்ச ஒழிப்புத்துறை போன்ற விசாரணை அமைப்புகளைக் கொண்டு சோதனை நடத்திக் கொள்ளுங்கள்.
முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்து கொள்ளுங்கள். என்னை ஒரு போதும் அச்சுறுத்த முடியாது.
இவ்வாறு கூறினார்.