ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது சாத்தியமில்லை – மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கைவிரிப்பு ..!

826

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு மறுத்ததை அடுத்து, தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அமைச்சரவையில் இருந்து விலக தெலுங்கு தேசம் முடிவு செய்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு ஆந்திராவில் இருந்து பிரிந்து தெலுங்கானா தனி மாநிலம் உருவானபோது, ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. எனினும் இதுவரை ஆந்திர மாநிலத்திற்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை.

ஐதராபாத்தில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மலைப்பகுதியில் உள்ள 3 மாநிலங்களைத் தவிர, பிற மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுவது, 14-வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டபின்னர், சாத்தியமற்றதாக உள்ளதாக கூறினார். சிறப்பு அந்தஸ்துக்கு நிகரான சலுகைகளையும், நிதி உதவியையும் ஆந்திர மாநிலத்திற்கு வழங்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து, அதிருப்தியடைந்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் பேசியபோது, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் அசோக் கஜபதி ராஜீ மற்றும் ஒய். எஸ். சவுத்ரி ஆகிய இருவரும் இன்று தங்கள் பதவியை ராஜினாமா செய்வார்கள் என்று தெரிவித்தார். மாநிலத்தின் நலன் புறக்கணிக்கப்படுவதால், வேறு வழியின்றி இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார். அமைச்சர்கள் பதவி விலகுவது முதல் கட்டம் தான் என்றும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் முடிவுக்கு பதிலடி அளிக்கும் வகையில், சந்திரபாபு அரசில், அங்கம் வகிக்கும் பாஜக சேர்ந்த அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். சுகாதார அமைச்சர் பதவி வகித்த கமினேனி ஸ்ரீநிவாஸ் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பிடிகொண்டலா மனிகைலா ராவ் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்து, தங்களது விலகல் கடிதத்தை முதல்வர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இதனிடையே, தெலுங்கு தேசத்தைத்தொடர்ந்து, பாஜக தலைமையிலான மத்திய அரசுடன் ஏற்கெனவே அதிருப்தியில் இருந்து வரும் சிவசேனாவும் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகக்கூடும் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.