நெடுஞ்சாலையில் வேகத்தடை மற்றும் மின்விளக்குகள் அமைக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்..!

148

ஆரணி அருகே உள்ள நெடுஞ்சாலையில், சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது கார் மோதியதில், சிறுவன் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். இதனால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நெடுஞ்சாலையில் வேகத்தடை மற்றும் மின்விளக்குகளை அமைக்காத நெடுஞ்சாலைத் துறையினரை கண்டித்து, திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேவூர் அருகே, சாலை விரிவாக்கப் பணிக்காக, நெடுஞ்சாலையில் வேகத்தடை அகற்றப்பட்டது. இதனிடையே,சாலை விரிவாக்கப் பணி முடிந்தும் நெடுஞ்சாலை துறையினர் வேகத்தடையை அமைக்கவில்லை. இதனால் அப்பகுதியில் தொடர்ந்து விபத்துகள் அதிகரித்து வந்தது. இது குறித்து, நெடுஞ்சாலைத் துறையினரிடம், பலமுறை புகார் அளித்தும், அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தேவா, சுப்புலட்சுமி, சார்லஸ் ஆகியோர் நெடுஞ்சாலையின் சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத கார் ஒன்று அவர்கள் மீது மோதியதில், அவர்கள் மூவரும் காயம் அடைந்தனர்.

உடனடியாக பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், காயம் அடைந்த மூவரும், 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். போதிய வேகத்தடை மற்றும் மின்விளக்குகள் இல்லாததே,விபத்துக்கு காரணம் என்றும், ஆகையால் உடனடியாக நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் சாலை மறியில் கைவிடப்பட்டது.இதனால்,ஆரணி – வேலூர் நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.