சுகாதார சீர்கேடு இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து, ஆரணி அரசு மருத்துவமனையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

229

கடந்த 3 நாட்களுக்கு முன் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்த கூலித்தொழிலாளியின் மகன்கள் இருவரை ஆரணி மருத்துவமனை எடுத்துவந்தபோது, பிரேத பரிசோதனை செய்ய மருத்துவமனையில் போதுமான வசதியில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டது. நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க போதுமான மருத்துவர்களும், மருத்துவ வசதிகளும் ஆரணி மருத்துவமனையில் இல்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆரணி மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நோயாளிகளிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் இணை மருத்துவ இயக்குனர் மற்றும் தலைமை மருத்துவரிடம் ஆலோசனை நடத்திய அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், உடனடியாக குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டுமென அறிவுறுத்தினார். அப்போது மாவட்ட ஆட்சியர் ஞானசேகரன், ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் ஏழுமலை ஆகியோர் உடன் இருந்தனர்.