கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 69 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு – அமைச்சர் நிலோபர் கபில்

175

தமிழகத்தில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 69 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்துள்ளார்.

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி,தொழிலாளர் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் பள்ளி குழந்தைகளுடன் மெட்ரோ தொடர் வண்டி விழிப்புணர்வு பயணம் நடைபெற்றது. இதில் 250 பள்ளி மாணவர்களுடன் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபில், நடிகர் விஜய் ஆண்டனி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விமான நிலைய மெட்ரோ வரை மாணவர்களுடன் அமைச்சர் நிலோபர் கபிலும், நடிகர் விஜய் ஆண்டனியும் பயணம் செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் நிலோபர் கபில், தமிழகத்தில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 69 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், குழந்தைகளை பணியாளராக வைத்திருந்த 11 தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து பேசிய விஜய் ஆண்டனி, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பிரசாரத்தில் அனைவரும் கண்டிப்பாக ஈடுபட வேண்டும் என்றும், தங்களது வீட்டருகே யாராவது குழந்தை தொழிலாளர்கள் இருந்தால், அவர்களது பெற்றோர்களிடம் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறினார்.