வார்னிஷில் இருந்து வெளிப்பட்ட விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி! சென்னை அண்ணா பல்கலை. வளாகத்தில் பரிதாபம்!!

233

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சூரிய சக்தி மின்சாரப் பணியில் ஈடுபட்ட 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி இறந்தனர்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் சிறிய அளவில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் கட்டிட பணி நடந்து வருகிறது. அதில் பூமிக்கடியில் கிணறு போன்ற அறை அமைத்து அதற்கு வார்னிஷ் அடிக்கும் பணி நடக்கிறது.
இந்த பணியில் ஈடுபட்ட அம்பத்தூரை சேர்ந்த தீபன்(25) மற்றும் அயப்பாக்கத்தை சேர்ந்த ரமேஷ் (26) ஆகிய இரண்டு தொழிலாளிகள் வார்னீஸ் அடிக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை இந்த பணியில் ஈடுபட பூமிக்கடியில் உள்ள அந்த குறுகிய அறையில் இறங்கினர்.
உள்ளே காற்று வெளியேறும் வசதி இல்லாத நிலையில் வார்னீஸை திறந்த போது திடீரென அதிலிருந்த வாயு வெளியேறி அந்த அறை முழுவதும் பரவியது. இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.
இருவரும் தகுந்த பாதுகாப்பு கவசங்களோ மூச்சுதிணறல் ஏற்பட்டால் சமாளிக்கும் வகையில் உபகரணங்களோ கொண்டு செல்லவில்லை. இதனால் உடனடி மரணம் நிகழ்ந்தது.
இது குறித்து தீபனின் தாயார் சத்தியா அளித்த புகாரின் பேரில் கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.