தேர்வுத்தாள் முறைகேடு – விசாரணை தீவிரம்

140

சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வுத்தாள் முறைகேடு வழக்கில், உதவி பேராசிரியர்கள் விஜயகுமார், சிவகுமார் ஆகியோர், இன்று லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளனர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வுத்தாள் முறைகேடு வழக்கில், முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா மற்றும் உதவி பேராசிரியர்கள் விஜயகுமார், சிவக்குமார் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வுத்தாள் முறைகேடு புகாரை அடுத்து, உமா உள்ளிட்ட பத்து பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, உதவி பேராசிரியர்கள் பணியாற்றிய திண்டிவனம் கல்லூரி மற்றும் அவர்களது வீடுகள், அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த முறைகேட்டில், மேலும் பல அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்வதற்கான வாய்ப்புள்ளதாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், உதவி பேராசிரிய்ர்கள் விஜயகுமார், சிவகுமார் ஆகியோருக்கு அனுப்பிய சம்மனின் பேரில், ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக இன்று ஆஜராகியுள்ளனர். உதவி பேராசிரியர்களிடம் பெறும் வாக்குமூலத்தின் அடிப்படையில், விசாரணையை முன்னெடுத்துச் செல்ல லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.