தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் முறைகேடு நடந்த விவகாரம் ; உதவி பேராசிரியர்களிடம் 3ஆம் நாளாக இன்று விசாரணை

175

தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் முறைகேடு, பேராசிரியர்களிடம் விசாரணை என பரபரப்பான சூழ்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் முறைகேடு புகாரையடுத்து, முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உமா, பேராசிரியர் விஜயகுமார், உதவி பேராசிரியர் சிவக்குமார் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, பத்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பேராசிரியர் விஜயகுமார், உதவி பேராசிரியர் சிவக்குமார் ஆகியோரிடம் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற விசாரணையில், தேர்வுத்தாள் முறைகேட்டிற்கு அண்ணா பல்கலைக்கழக ஊழியர்கள், முன்னாள் பேராசிரியர்கள் என மேலும் 30 பேருக்கு தொடர்பு இருப்பது அம்பலமாகியுள்ளது.

இந்த நிலையில், பேராசிரியர்கள் இருவரிடமும் இன்று 3-வது நாளாக விசாரணை நடைபெற உள்ளது. இதனிடையே, அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர் சூரப்பா பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில், தேர்வுத்தாள் முறைகேடு குறித்து, அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறலாம் எனவும், இந்த விவகாரத்தில், நிர்வாக ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.