தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் 6-வது நாளாக அஞ்சலி..!

147

தி.மு.க.வின் உண்மை விசுவாசிகள் மற்றும் தொண்டர்கள் தனது பக்கம் உள்ளதாக, மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.

கருணாநிதி நினைவிடத்தில் தொடர்ந்து 6-வது நாளான இன்றும் ஏராளமானோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அதிகாலை 4 மணியளவில் நடிகர் விஜய் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொது செயலாளர் சுதாகர் ரெட்டி, மாநில பொதுச் செயலாளர் முத்தரசன், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் தமிழன் பிரசன்னா உள்ளிட்ட பலரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி தனது மனைவி, மகன், மகள் ஆகியோருடன் நினைவிடத்திற்கு வந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது ஆதங்கத்தை தந்தையிடம் தெரிவித்துள்ளதாகவும், தனது ஆதங்கம் குறித்து தற்போது கூற முடியாது எனக் கூறிய அவர், தி.மு.க.வின் உண்மை விசுவாசிகள் மற்றும் தொண்டர்கள் தன் பக்கம் உள்ளதாகவும், காலம் பதில் சொல்லும் எனவும் கூறினார்.