திருப்பதி அருகே சர்வதேச அளவில் செம்மரம் கடத்தும் நபர் கூட்டாளியுடன் கைது செய்து ஆந்திர போலீஸார் அதிரடி நடவடிக்கை..!

831

திருப்பதியில் சர்வதேச செம்மரக் கடத்தல்காரனை அவனது கூட்டாளியுடன் கைது செய்து, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.திருப்பதி புறநகர் பகுதியில் காவல்துறையினர் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாகச் சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் 6 செம்மரக்கட்டைகள் இருப்பதைக் கண்டறிந்த போலீஸார், அதில் வந்த இரண்டு நபர்களையும் கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட இரண்டு பேரில், ஒருவன் சர்வதேச அளவில் செம்மரம் கடத்தும் காட்மாண்டுவை சேர்ந்த முகமது இஷாக் என்பதும், மற்றொருவன் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நஷீர் அகமது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், மைசூரில் உள்ள குடோனில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, மைசூர் சென்ற போலீஸார், குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.