ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி வரும் 24ஆம் தேதி பந்த் நடைபெறும் – ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜெகன்மோகன்

197

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்தப்போராட்டத்தால், அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மத்திய அரசைக் கண்டித்து, 24ஆம் தேதி பந்த் நடைபெறும் என ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருந்தார். இதனையடுத்து, இன்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மேற்கொண்டு வரும் பந்த் காரணமாக, விசாகப்பட்டினம், விஜயவாடா, காக்கிநாடா உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பேருந்துகள், வாகனங்கள் ஓடவில்லை. கடைகள், வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பிரகாசம் மாவட்டத்தில் ஆங்கோல் நகரில், மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்துகோரி, சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். இதுபோல, மாநிலம் முழுவதும், மத்திய அரசை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஒய்எஸ்ஆர் காங்கிரசார் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளதால், பயணிகள் அவதிக்குள்ளாகினர். மேலும், தமிழகத்தில் இருந்து திருப்பதி சென்ற பக்தர்களும், பேருந்துகள் எதுவும் இயக்கப்படாததால், சொந்த ஊர் திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.