சென்னையில் 7 இடங்களில் அம்மா வாரச்சந்தை மலிவான விலையில் 1,256 பொருட்கள்.

151

சென்னை மக்களுக்கு மலிவு விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் வகையில் 7 இடங்களில் மாநகராட்சி சார்பில் அம்மா வாரச்சந்தை விரைவில் திறக்கப்பட உள்ளது. அதில் காய்கறி, மளிகை, பாத்திரங்கள், மின்னணு சாதனங்கள் உட்பட 1,256 பொருட்களை விற்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னையில் மக்களுக்கு அனைத்து விதமான பொருட்களையும் மலிவு விலையில் வழங்க, மாநகராட்சி சார்பில் அம்மா வாரச்சந்தை திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, நாள் ஒன்றுக்கு ஒரு இடம் வீதம், வாரம் முழுவதும் 7 இடங்களில் வாரச்சந்தை திறக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
200 கடைகள்
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது–
சென்னையில் முதல்கட்டமாக அரும்பாக்கம் பசுமை தீர்ப்பாயம் அலுவலகம் அருகில் மின்ட் மேம்பாலம் அருகில், கோட்டூர்புரம், ஏதேனும் ஒரு கடற்கரை பகுதி என மொத்தம் 7 இடங்களில் அம்மா வாரச்சந்தை திறக்கப்பட உள்ளது. ஒவ்வொரு சந்தையிலும் 200 கடைகள் இடம் பெறும்.
ஒவ்வொரு கடைக்கும் 100 சதுர அடியில் இடம் ஒதுக்கப்படும். அங்கு மின் விளக்கு, மின்விசிறி வசதி செய்து கொடுக்கப்படும். ஒவ்வொரு இடத்திலும் சுமார் 2 முதல் 5 ஏக்கர் வரை இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அங்கு பொருட்களை விற்பதற்காக விவசாயம், தோட்டக்கலை, கரும்பு வளர்ச்சி, பிற்படுத்தப்பட்டோர் நலம், பட்டு வளர்ச்சி ஆகிய துறைகள், தமிழ்நாடு மூலிகை மருந்து கழகம், கதர் மற்றும் கிராமத்தொழில்வாரியம், மகளிர் மேம்பாட்டு ஆணையம், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் என 200–க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
1,256 பொருட்கள்
மேற்கண்ட நிறுவனங்கள் மூலம் காய்கறி, பழம், மளிகைப் பொருள், அரிசி வகைகள் மற்றும் அவற்றில் இருந்து மதிப்பு கூட்டு முறையில் தயாரிக்கப்பட்ட அவல், பொரி, சோளம் மற்றும் அதில் இருந்து தயாரிக்கப்பட்ட சோளப்பொரி, சோளமாவு, சோள ரவை மற்றும் சமையல் பாத்திரங்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், கோழி மற்றும் ஆட்டு இறைச்சி, மீன்கள் என மொத்தம் 1,256 பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.