உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த பா.ஜ.க. தலைவர் அமித்ஷா வியூகம்…………

512

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த ஆறு கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணியை அமைக்க பா.ஜ.க. தலைவர் அமித்ஷா வியூகம் அமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டு உள்ள நிலையில் எப்படியாவது ஆட்சியை
கைப்பற்றும் நடவடிக்கைகளில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக இறங்கியுள்ளார். இதற்கு வசதியாக காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை ஒருங்கிணைத்து விவசாயிகளுக்கு ஆதரவாக முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிக்கரமாக நடத்தியுள்ளார். இந்த கூட்டணியை அப்படியே சிதறாமல் உள்ளாட்சித்தேர்தல் வரை கொண்டு போகும் முயற்சியில் அவர் தீவிரமாக இறங்கியுள்ளார்.
ஸ்டாலினின் இந்த நடவடிக்கை தமிழகத்தில் காலுன்ற முயற்சிக்கும் பா.ஜ.கவுக்கு
எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, உள்ளாட்சித்தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தும் வகையில், மெகா கூட்டணி அமைக்கும்
நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். இதற்காக தமிழகத்தில் அடுத்த மாதம் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய அமித்ஷா முடிவு செய்துள்ளார். அப்போது, தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., த.மா.கா உள்ளிட்ட ஆறு கட்சிகளுடன் கூட்டணிக்கு அச்சாரம் போடும் நடவடிக்கைகளில் ஈடுபட அவர் திட்டமிட்டுள்ளார். மேலும், இந்த கூட்டணியில் பிரிந்து கிடக்கும் எடப்பாடி அணியை தங்கள் பக்கம் இழுக்கவும் அமித்ஷா வியூகம் அமைத்துள்ளார்.
தங்கள் அணிக்கு வரமறுத்தால் தமிழகத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்தவும் பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.