ஆட்சி அதிகாரத்துக்காகவே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைகின்றன – பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா

83

ஆட்சி அதிகாரத்துக்காகவே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதாக, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

பா.ஜ.க.வின் 2 நாள் தேசிய கவுன்சில் கூட்டம் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று தொடங்கியது. கூட்டத்தில் கட்சியின் தலைவர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி உள்பட பலர் கலந்துகொண்டனர். சுமார் 12 ஆயிரம் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது பேசிய அமித்ஷா, எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி என்பது ஒரு தலைவரோ, ஒரு கொள்கையோ இல்லாத வெவ்வேறான குழுக்கள் இணைந்தது என்றும், ஆட்சி அதிகாரத்துக்காக மட்டுமே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த தேர்தலில் அந்த கட்சிகள் ஒவ்வொன்றையும் பா.ஜ.க. தோற்கடித்துள்ளதை நினைவுபடுத்திய அவர், மக்கள் வலிமையான அரசுக்காகவே பா.ஜ.க.வை விரும்புவதாகவும் தெரிவித்தார். அயோத்தியில் விரைவில் ராமர் கோவில் கட்டவே பா.ஜ.க.-வின் விருப்பம் என தெரிவித்த அமித்ஷா, ராமர் கோவில் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியாவதற்கு காங்கிரஸ் தடைகளை உருவாக்கி வருவதாகவும் விமர்சனம் செய்தார்.