கருணாநிதி நினைவேந்தல் கூட்டம் : பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்கப் போவதில்லை

437

கருணாநிதி நினைவஞ்சலி கூட்டத்தில் அகில இந்திய பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்கப் போவதில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு திமுக சார்பில் வரும் 30-ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் ‘தெற்கில் உதித்தெழுந்த சூரியன்’ என்ற தலைப்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களுக்கு திமுக அழைப்பு விடுத்திருந்தது. காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி வெளிநாடு செல்ல இருப்பதால் பங்கேற்க முடியாது என்ற தகவல்கள் வெளியானது. அதேசமயம் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இந்த கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

திமுக சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்கிறார் என்ற செய்தி வெளியானதும், தேர்தல் கூட்டணியில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘திமுக கூட்டத்தில் பங்கேற்கபோவதில்லை என்று அமித்ஷா எடுத்துள்ள முடிவு மகிழ்ச்சியளிக்கிறது’ என்று பதிவிட்டுள்ளார். இதனால், திமுக தலைவர் கருணாநிதி நினைவஞ்சலிக் கூட்டத்தில் அகில இந்திய பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.