பாஜக தலைவர் அமித்ஷா வருகை உறுதி..!

480

சென்னையில் நடைபெற உள்ள கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் அமித்ஷாவும், ராகுல்காந்தியும் பங்கேற்பது உறுதி என திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, வருகிற 30-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள நினைவேந்தலில் தேசிய தலைவர்களான குலாம் நபி ஆசாத், தேவகவுடா, சரத்பவார், நிதிஷ்குமார், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் அமித்ஷா பெயர் அச்சிடப்பட்ட நிலையில், பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி இதற்கு மறுப்பு தெரிவித்தார். மேலும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர் ராஜனும் அமித்ஷா வருகை குறித்து கட்சி தலைமையில் இருந்து தகவல் வரவில்லை என தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் அமித்ஷா வருகை தருவது உறுதி என திமுகவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அமித்ஷாவின் ஒப்புதல் பெற்றே அழைப்பிதழில் அவரது பெயர் அச்சிடப் பட்டதாகவும், அதன்பின்னர் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை டி.ஆர்.பாலு வழங்கியதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ராகுல் காந்தியும் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது