பிரீமியம் ஹெச்1 பி விசாவுக்கான தடைக்காலம் நீட்டிப்பு..!

344

அமெரிக்காவில் பிரீமியம் முறையில் ஹெச்1 பி விசா வழங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்காலம் மேலும் நீட்டிக்கப்படுவதாக, அந்த நாட்டின் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில், சாதாரண முறையில் ஹெச்1 பி விசா பெற விண்ணப்பித்தவரின் விண்ணப்பம், 6 மாத காலங்களுக்குள் பரிசீலனை செய்யப்படும். ஆனால், பிரீமியம் முறையில் விண்ணப்பித்தவருக்கு, 15 நாள்களுக்குள் பரிசீலிக்கப்படும். அமெரிக்காவிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் இந்தியர்கள் உள்பட பலர் பிரீமியம் நடைமுறையிலேயே விசாவுக்கு விண்ணப்பித்து வந்தனர் இந்நிலையில் மிக அதிகமான விசா விண்ணப்பங்கள், பரிசீலனை செய்யப்படாமல் தேக்கத்திலிருப்பதைக் காரணம் காட்டி, பிரீமியம் நடைமுறையில் ஹெச்1 பி விசா வழங்குவதைக் கடந்த மார்ச் மாதம், அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்திவைத்தது.

இதனால் இந்தியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். முதலில், இந்தத் தடை செப்டம்பர் 10-ஆம் தேதி வரை விதிக்கப்பட்டுள்ளது என்று அறிவித்திருந்த அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் ஆணையம், தற்போது அடுத்த ஆண்டு பிப்ரவரி 19 வரை “பிரீமியம்’ விசா மீதான தடை தொடரும் என்று அறிவித்துள்ளது.