அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட உள்ள டொனால்டு டிரம்பை கொலை செய்ய முயன்றதாக, பிரிட்டனைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

197

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில், நடைபெற்ற பிரசார கூட்டத்தில், டொனால்டு டிரம்ப் பங்கேற்றார். அப்போது, ஒரு போலீஸ் அதிகாரியின் துப்பாக்கியை பறித்து, டிரம்பை கொல்வதற்கு முயன்றதாக, ஒருவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவருடைய பெயர் மைக்கேல் சான்ட்போர்ட் என்பதும், பிரிட்டனைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. டொனால்டு டிரம்பை அவர் தான் கொல்ல முயன்றதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறிய போலீஸார், அதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர் மீது, நவாடாவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சான்ட்போர்டை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், வழக்கை, வரும் ஜூலை, 5ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இதனிடையே, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் முன்னிலையில் உள்ளநிலையில், துவக்கம் முதலே, பல்வேறு சர்ச்சை பேச்சுக்களில் சிக்கியுள்ள டிரம்ப் மீதான இந்த கொலை முயற்சி, நாடகமாக இருக்கலாம் என, அமெரிக்க பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன.