அக்னி தீர்த்தக் கரையில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம்..!

316

ஆடி அமாவாசையையொட்டி, தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, நீர்நிலைகளில் புனிதநீராடி, சுவாமி தரிசனம் செய்தனர்.

ராமேஸ்வரத்தில் ஆடி அமாவாசையையொட்டி, திரண்ட பல்லாயிரக்கணக்கானோர், அக்னி தீர்த்தக் கரையில், புனித நீராடி, தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி பிதுர்ஹர்மா பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். இதனைத்தொடர்ந்து, ராமநாதசுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின், ஸ்ரீராமர் தங்க கருட வாகனத்தில் அக்னி தீர்த்தகரைக்கு எழுந்தருளியதை அடுத்து, தீர்த்தவாரி நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள், கடலில் புனித நீராடி, கடற்கரையில் அமர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, வழிபட்டனர். பின்னர் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு, அதிகாலை 4 மணி முதல் நடை திறக்கப்பட்டு, தொடர்ந்து, சுவாமிக்கு பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் சங்கிலித்துறை கடற்கரையில் அதிகாலை முதலே ஏராளமானவர்கள் திரண்டு புனித நீராடினர். பின்னர் கடற்கரையில் வேதவிற்பன்னர்கள், புரோகிதர்கள் முன் அமர்ந்து பலிகர்ம பூஜை செய்து, முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்தனர். கடற்கரை முழுவதும் பக்தர்களின் தலைகளாக காட்சியளித்தது. சுமார் 2 லட்சம் பக்தர்கள் கடலில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து, சுவாமியை வழிபட்டனர். இதனிடையே, தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரையில் ஏராளமானோர் இன்று தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, கடலில் புனித நீராடி வழிபாடு செய்தனர். இதனால் புதிய துறைமுகம் கடற்கரை பகுதியில் கூட்டம் அலைமோதியது.