“ஆன்டி பஞ்சர் ” பவுடர் மூலம் டயர் பஞ்சரானாலும் நிற்காமல் வண்டியை ஓட்டலாம் என அடித்து கூறுகிறார் அக்பர் அலி.

1504

நம் வாழ்க்கை சுழற்சியில் வாகனச் சக்கரங்கள் முக்கிய இடம் பெறுகின்றன. பல சமயங்களில் வாகனத்தின் டயர் பாதிவழியில் பஞ்சராகி நமக்கு கசப்பான அனுபவத்தை கொடுத்திருக்கும். இனி இந்த அனுபவம் இராது என்ற நம்பிக்கையை இங்கு விதைக்கிறார் ஒருவர்.

இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தாதவர்கள் இல்லை என்றே கூறும் அளவிற்கு, அவற்றின் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது. இந்த வாகனங்கள் அடிக்கடி பஞ்சராகி நம்மை அவஸ்தைக்கு ஆளாக்குவதுண்டு. இதிலிருந்து விடுபட எளிதான வழியை கண்டு பிடித்துள்ளார் அக்பர் அலி.
திருச்சியை சேர்ந்த இவர், 40 ஆண்டுகளாக டயர் பஞ்சர் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறார். எட்டாம் வகுப்பு வரை படித்து, சாதாரண பணியாளராக தொழிலை ஆரம்பித்த அவர், தனது கண்டுபிடிப்பான ஆன்டி பஞ்சர் பவுடர் மூலம் உயர்ந்து நிற்கிறார். இந்த பவுடருடன் தண்ணீரை கலந்து டியூப் அல்லது டயரில் ஊற்றிவிட்டால் டயர் பஞ்சரானாலும் நிற்காமல் வண்டியை ஓட்டலாம் என அடித்து கூறுகிறார் அக்பர் அலி.
இருசக்கர வாகனம் மட்டுமின்றி கார், லாரி, பேருந்து போன்ற பெரிய வாகனங்களுக்கும் இந்த பவுடர் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தனது இருசக்கர வாகனத்தில் 32 இடங்களில் உள்ள பஞ்சரை இந்த பவுடர் மூலம் சரிசெய்து, வாகனத்தை ஓட்டி வருவதாக நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்.
அக்பர் அலி. இவரது பெரிய மனக்குறை ஆன்டி பஞ்சர் பவுடருக்கு காப்புரிமை கிடைக்காததுதான். 3 வருடமாக மத்திய, மாநில அரசு மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகம் என விண்ணப்பித்தும் இதுவரை காப்புரிமை எட்டாக் கனியாகவே இருப்பதாக வேதனை தெரிவிக்கிறார் அக்பர் அலி.
அரசு இந்த படிக்காத மேதையின் கண்டுபிடிப்பை அங்கீகரித்து காப்புரிமை வழங்கி, உலக அரங்கில் உயர்த்தி பிடிக்க வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பமாகும். கிடைக்குமா, காப்புரிமை? நம்பிக்கை வைப்போம்… நாளைய பொழுது நல்ல பதிலை நமக்கு தருமென…