திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் வெற்றிபெற்றது செல்லாது !

157

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் வெற்றிபெற்றது செல்லாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் 2016ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் வெற்றிபெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். மருத்துவமனையில் சுயநினைவின்றி ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்த நிலையில், போசின் வேட்பு மனுவில் ஜெயலலிதாவின் கைரேகை இடம்பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி அவரின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரியிருந்தார். இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ ஏ.கே.போஸ் கடந்த ஆண்டு ஆகஸ்டு இரண்டாம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து அந்தத் தொகுதியில் தான் வெற்றிபெற்றதாக அறிவிக்கக் கோரி சரவணன் மற்றொரு மனு தாக்கல் செய்தார். வழக்கு நிலுவையில் உள்ளதைக் காரணம்காட்டித் திருப்பரங்குன்றத்துக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படாததால், அந்த வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக சரவணன் அறிவித்தார். திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத் தேர்தலை அறிவிக்காத தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் அந்த வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என அறிவித்துள்ளது. அதேசமயம் தன்னை வெற்றிபெற்றதாக அறிவிக்கக் கோரிய சரவணன் மனுவும் தள்ளுபடி செய்வதாகக் குறிப்பிட்டுள்ளது.