2-வது நாளாக பயணிகளிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை..!

334

திருச்சி விமான நிலையத்தில் 2-வது நாளாக பயணிகளிடம் சிபிஐ நடத்தி வரும் சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து திருச்சி வழியாக தங்கம் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சிங்கப்பூரில் இருந்து நேற்று மாலை வந்த ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த 20 பயணிகள் வெளியே வந்தபோது, சிபிஐ அதிகாரிகள் 11 பேர் அவர்களை மீண்டும் விமான நிலையம் உள்ளே அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த விமானத்தில் வந்த மற்ற பயணிகளையும் வெளியே விடாமல் தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணை விடியவிடிய நடைபெற்று, இரண்டாவது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. தங்கம் கடத்தல் சம்பவங்களில் திருச்சி விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள், குடியுரிமை பிரிவு அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா? என பயணிகளிடம் சிபிஐ அதிகாரிகள் துருவிதுருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையின்போது, பயணிகளிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைவரிடமும் விசாரணை நிறைவடைந்தபின், முழு விபரங்கள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.