ஏர்செல் – மேக்சிஸ் முறைகேடு வழக்கு – கார்த்தி உட்பட 5 பேர் மீது 99 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்..!

386

ஏர்செல் – மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக அமலாக்கத்துறை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2006-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்தது.
பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் இந்த முதலீடு மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்த நிலையில், அமலாக்கத்துறையும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தின்கீழ் தனியாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
அத்துடன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான 1 கோடி கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது.
இது தொடர்பாக ப.சிதம்பரம் நேற்று 2 வது முறையாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
கார்த்தி சிதம்பரம் உட்பட 5 பேர் மீது 99 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மீதான விசாரணை ஜூலை 4 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.