ஆப்கானிஸ்தானில் மசூதி மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

251

ஆப்கானிஸ்தானில் மசூதி மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 63 பேர் காயம் அடைந்தனர்.
ஆப்கானிஸ்தான் – ஈரான் எல்லையருகே உள்ள ஹெராத் என்ற நகரத்தில் அமைந்துள்ள ஜவாத்யா என்ற மசூதியில் திடீரென இரண்டு மர்ம நபர்கள் நுழைந்துள்ளனர். மசூதி வளாகத்திற்குள் நுழைந்ததும், இரண்டு நபர்களில் ஒருவர் தனது உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்கச்செய்துள்ளார். அப்போது மற்றொரு நபர் தன்னிடமிருந்த துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த திடீர் தாக்குதல் மற்றும் குண்டு வெடித்ததில், மசூதியில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 29 பேர் உயிரிழந்தனர். மேலும் 63 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தில் தாக்குதல் நடத்திய இருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காபூலில் உள்ள ஈராக் தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்ற ஓரிரு நாளில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.