ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை கமிஷனுக்கு மாற்றிக்கொடுக்க முயன்ற ஒரு பெண் உட்பட 17 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

97

ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் செல்லாத 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை கமிஷன் அடிப்படையில் மாற்றிக்கொடுக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, விஜயவாடா மாநகர காவல்துறை கமிஷனர் தலைமையில் போலீஸார் பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அப்போது செல்லாத ரூபாய் நோட்டுக்களை கமிஷனுக்கு மாற்றிக்கொடுத்ததாக, குண்டூர், மேற்கு கோதாவரி, கிருஷ்ணா மாவட்டங்களைச்சேர்ந்த ஒரு பெண் உட்பட 17 நபர்களை கைது செய்தனர். வியாபாரிகளிடம் இருந்து அவர்கள் மாற்றிக்கொடுப்பதற்காக வாங்கி வைத்திருந்த 6 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பணமாற்றத்திற்காக இந்த கும்பல், 18 முதல் 20 சதவீத கமிஷனை பெற்றுவந்ததும் தெரிய வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, இந்த பணபரிமாற்றங்களில் வங்கி ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.