அதிமுக கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கீடு விபரம் இன்று வெளியீடு

73

அதிமுக கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகிறது.

அதிமுக கூட்டணியில் அதிமுக 20 தொகுதிகளிலும், பாமக 7 தொகுதிகளிலும், பாஜக 5 தொகுதிகளிலும், தேமுதிக 4 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. மேலும், புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும், புதுச்சேரி தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

எண்ணிக்கை அடிப்படையில் தொகுதிகள் பிரிக்கப்பட்டாலும், யார் யாருக்கு, எந்தெந்த தொகுதிகளை ஒதுக்கீடு செய்வது என்பது குறித்த விவாதங்கள், அதிமுக கூட்டணியில் தொடர்ந்து நீடித்து வந்தது. இந்த நிலையில், சிக்கல்களுக்கு நேற்று இரவில் தீர்வு காணப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து, இன்று அதிமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை ஆழ்வார்பேட்டை கிரவுன் பிளாசா ஹோட்டலில் இன்று காலை 9.45மணிக்கு நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணைமுதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இணைந்து, அதிமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப்பங்கீடு விபரங்களை வெளியிடுகின்றனர்.