அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் விவரம்..!

204

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றிட உறுதி, பாஜக வெற்றிக்கு மகிழ்ச்சி என்பன உள்ளிட்ட 5 தீர்மானங்கள் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், இன்று காலை தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், செய்தித் தொடர்பாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலிலும், 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலிலும், அதிமுக வேட்பாளர்களுக்கும், கூட்டணி வேட்பாளர்களுக்கும் வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணிக்கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு அரும்பணியாற்றியவர்களுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை அமைத்திருக்கும் பாஜக, பிரதமரை வழிமொழியும் வாய்ப்பினை அதிமுகவுக்கு அளித்தமைக்கு கூட்டத்தில் மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டது.

உள்ளாட்சி தேர்தலில் சிறப்புடன் பணியாற்றி, மகத்தான வெற்றியைப் பெற்றிட, தேர்தல் பணிகளை உடனடியாகத் தொடங்கி மக்கள் மனங்களை வென்றெடுக்கக் கூட்டத்தில் சூளுரைக்கப்பட்டது.

மக்கள் இயக்கமான அதிமுக, தூய அரசியல் பணிகளை மேற்கொண்டு, தமிழக மக்கள் எல்லோரும் இன்புற்று வாழ்ந்திடும் வண்ணம் செயல்படவும் கூட்டத்தில் உறுதியேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.