ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வரக்கோரி பிரதமர் மோடியை சந்தித்து பேச அதிமுக எம்.பிக்கள் முடிவு….

139

ஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டம் கொண்டுவர வலியுறுத்தி அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார். பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்ற தீர்ப்பு தடையாக உள்ளதால், அவசர சட்டம் கொண்டுவந்து தடையை நீக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில், இதுதொடர்பாக பிரதமர் மோடியை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையொட்டி, அதிமுகவின் மக்களவை குழுத் தலைவர் வேணுகோபால், மாநிலங்களவை குழுத் தலைவர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் இரு அவைகளின் அதிமுக உறுப்பினர்கள் இன்று டெல்லிக்கு செல்வதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இதற்கான ஏற்பாட்டை மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை செய்து வருவதாக கூறப்படுகிறது.