அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை தற்காலிகமாக முடக்கி தலைமை தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

206

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை தற்காலிகமாக முடக்கி தலைமை தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தங்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று சசிகலா மற்றும் ஓபிஎஸ் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர். இதனைத்தொடர்ந்து, இருதரப்பினரும் தங்களது கருத்தை நேரில் தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி முன்னிலையில் நேற்று விசாரணை நடைபெற்றது. சசிகலா அணி சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் வீரப்ப மொய்லி, சல்மான் குர்ஷித் மோகன் பராசரன் உள்ளிட்டோர் வாதத்தில் பங்கேற்றனர். ஓபிஎஸ் அணி சார்பில் மனோஜ்பாண்டியன், குருகிருஷ்ண குமார், வைத்திய நாதன் ஆகியோர் வாதிட்டனர். இருதரப்பினரும், இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று நஜீம் ஜைதியிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை தேர்தல் ஆணையம் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கட்சி மற்றும் இரட்டை இலை சின்னத்தை இருதரப்பினரும் பயன்படுத்தக்கூடாது எனவும், அதிமுகவின் பெயரை பயன்படுத்தி வாக்கு சேகரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி, 27 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.