தமிழர் தந்தை ஆதித்தனார் சிலையை எழும்பூரில் மீண்டும் அதே இடத்தில் நிறுவ தமிழக அரசு நடவடிக்கை ..!

332

சென்னை எழும்பூர் பாந்தியன் சாலை போலீஸ் கமிஷனர் சாலை சந்திப்பில் அகற்றப்பட்டிருந்த ஆதித்தனார் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
1987-ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர், சென்னை பாந்தியன் சாலை, கமிஷனர் சாலை சந்திப்பில், தமிழர் தந்தை ஆதித்தனார் சிலையை, திறந்து வைத்தார். மேலும், ஆதித்தனார் சிலை இருக்கும் முக்கிய சாலையான ஹாரிஸ் சாலைக்கு ஆதித்தனார் சாலை எனவும் பெயர் மாற்றம் செய்து அறிவித்தார். இதனையடுத்து, அனைத்து அரசியல் இயக்கங்களாலும் மதிக்கப்படக்கூடிய ஆதித்தனார் அவர்களின் சிலைக்கு, ஆண்டுதோறும் 27ஆம் தேதியன்று, தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர்.

இதனைத்தொடர்ந்து, பாந்தியன் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, கடந்த மே மாதம் 29 ஆம் தேதி ஆதித்தனார் சிலையை போக்குவரத்து போலீஸார் அகற்றினர். இதனையடுத்து, மீண்டும் அதே இடத்தில் ஆதித்தனார் சிலை வைக்கப்பட வேண்டும் என, ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், தமிழ் அமைப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், ஆதித்தனார் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்கக்கோரி, நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்ததை தொடர்ந்து, தற்போது, சிலையை நிறுவுவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. குறித்த காலத்தில் சிலையை நிறுவுவதற்கான பணிகள் அனைத்தும் நிறைவடையும் என போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.