தனியார் பேருந்தும் காரும் மோதிய விபத்தில் 5பேர் பலி

384

திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை அருகே தனியார்பேருந்தும் காரும் நேருக்குநேர் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த 5பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி சவேரியார்புரத்தைச் சேர்ந்த சேவியர், அருள்மணி, நிக்கோலஸ், பன்னீர், மாடசாமி ஆகிய ஐந்து பேரும் ஒரு காரில் கன்னியாகுமரிக்குச் சென்றுவிட்டு அங்கிருந்து குற்றாலத்துக்குச் செல்வதற்காக வந்துள்ளனர். இவர்கள் முன்னீர்பள்ளம் வந்தபோது அங்கு நண்பர் ஒருவரைக் காரில் ஏற்றியுள்ளனர். இந்தக் காரை மாடசாமி ஓட்டிவந்துள்ளார். கார் திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை அருகில் சென்றபோது, பாபநாசத்தில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்த தனியார் பேருந்துடன் நேருக்கு நேர் மோதியது. இதில் சேவியர், நிக்கோலஸ், பன்னீர், மாடசாமி உள்ளிட்ட 5 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த பத்தமடை காவல்துறையினரும், சேரன்மாதேவி தீயணைப்புத் துறையினரும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த அருள்மணியை மீட்டுப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். உயிரிழந்த ஐவரின் உடல்களும் பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. தகவல் அறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் நிகழ்விடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டார். இந்த விபத்துக் குறித்துப் பத்தமடை காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.