அதிவேகமாக இயக்கப்படும் பள்ளி பேருந்துகள் | பேருந்து மோதியதில் தாய், குழந்தை படுகாயம்

167

திருவெறும்பூரில் தனியார் பள்ளிக்கு சொந்தமான பேருந்து மோதிய விபத்தில் தாய், மகள் படுகாயமடைந்தனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் தனியார் பள்ளிக்கு சொந்தமாக 50-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் அனைத்தும் காலை மற்றும் மாலை வேளைகளில் அதிவேகமாக இயக்கப்படுவதாகவும், இதனால் விபத்துகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் பள்ளி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்துள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகம் அதைப் பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை. இந்நிலையில், வி.எஸ். நகரை சேர்ந்த நித்யா என்பவர் தனது 5 வயது மகள் ஷிவானியை இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து சென்றபோது தனியார் பள்ளிக்கு சொந்தமான பேருந்து மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிவேகத்தில் பள்ளி பேருந்துகளை இயக்குவதே இதுபோன்று விபத்துகளுக்கு காரணம் என தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள், இதனை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.