பேருந்துடன், மினிவேன் நேருக்கு நேர் மோதல். இரண்டு பேர் உயிரிழப்பு

253

திருச்சி அருகே ஆம்னி பேருந்தும் மினி வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாயினர்.

தனியார் ஆம்னி பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, திருச்சிக்கு தக்காளி லோடு ஏற்றிக்கொண்டு சென்ற மினி வேன் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில், காவல்காரன்பாளையம் என்னும் இடத்தில் சென்றுக்கொண்டிருக்கும்போது, எதிரே வந்த தனியார் ஆம்னி பேருந்தின்மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் மினி வேனின் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பேருந்தில் பயணம் செய்த பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

முன்னே சென்றுக்கொண்டிருந்த லாரியை முந்த முயற்சித்தபோது கட்டுப்பாட்டை இழந்த மினி வேன், எதிரே வந்த ஆம்னி பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. நள்ளிரவில் நடைபெற்ற விபத்தால் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து பேட்டவாய்த்தலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.