ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு, வகுப்புகளை புறக்கணித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

178

தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாகை தலைமை தபால் நிலையம், அருகே தனியார் பொறியியல் மற்றும் கலை கல்லூரி மாணவர்கள் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வகுப்புகளை புறக்கணித்து ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன் பொதுமக்கள் இணைந்து போராடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அரசு கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டு மீதான தடையை உடனடியாக நீக்க மத்திய மாநில அரசுகள் அவசர சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதில், ஜல்லிக்கட்டு நடக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும், தவறினால் புரட்சி வெடிக்கும் என்று மாணவர்கள் ஆவேசமாக முழக்கங்களை எழுப்பினர்.

தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்ற வலியுறுத்தி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து இராஜபாளையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு மத்திய அரசு அவசரக்கட்டம் கொண்டு வருவதற்கு வலியுறுத்தியும், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும், விழுப்புரம் காகுப்பம் பகுதியில் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அதனைச் சுற்றியுள்ள 50 கிராமங்களில் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மதுரை தமுக்கம் மைதானத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் எனக்கூறி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், தமிழர்களின் பாரம்பரியமான விளையாட்டான ஜல்லிக்கட்டை காத்திடவும், கைது செய்த இளைஞர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் 200க்கும் மேற்பட்ட அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல, திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தியும், பீட்டா அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.

திண்டுக்கல்லில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பிரமாண்ட பேரணி நடத்தினர். திண்டுக்கல் பைபாஸ் சாலையில் தொடங்கிய பேரணி, திண்டுக்கல் – திருச்சி சாலையில் உள்ள கல்லறை தோட்டத்தில் முடிவடைந்தன.

இதேபோன்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையத்தில் உள்ள பெரியார் திடலில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, மாணவர்கள் கூட்டமைப்புகள் நேற்று முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பதாகைகளை கையில் ஏந்தி இன்று பேரணியாக சென்றனர்.