டிசம்பர் இறுதிக்குள் நேரடி மானியத் திட்டத்துடன் ஆதார் எண் இணைப்பு! மத்திய அரசு இலக்கு நிர்ணயம்!!

253

புதுடெல்லி, ஜூலை. 25–
டிசம்பர் மாத இறுதிக்குள் நேரடி மானியத் திட்டத்துடன் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் என மத்திய இலக்கு நிர்ணயித்துள்ளது.
மத்திய அரசால் அளிக்கப்படும் நிதி, உரிய பயனாளிக்குக் கிடைக்கும் வகையில் நேரடி மானியத் திட்டம் கடந்த 2013-இல் ஏற்படுத்தப்பட்டது. அந்தத் திட்டத்தின் கீழ் அனைத்து பணப்பலன்களும் பயனாளியின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பரிமாற்றம் செய்யப்படுகிறது.
நேரடி மானியம்
தற்போது அந்தத் திட்டத்தின் கீழ் 74 திட்டங்களுக்கான மானியம் அல்லது நிதியானது பொதுமக்களை சென்றடைகிறது. மேலும் மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களில் நேரடி மானியத் திட்டத்துக்கென தனி அலுவலகம் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
நேரடி மானியத் திட்டத்துக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், அந்தத் திட்டம் அமைச்சரவை செயலகத்துக்கு கடந்த ஆண்டு மாற்றப்பட்டது.
அந்தத் திட்டம் தற்போது பிரதமர் அலுவலகத்தின் நேரடி கண்காணிப்பில் உள்ளது.
இலக்கு நிர்ணயம்
மத்திய அரசால் வழங்கப்படும் நலத்திட்ட நிதி மற்றும் மானிய திட்டங்கள் அனைத்தையும் நேரடி மானியத் திட்டத்தின் கீழ் அடுத்த ஆண்டு (2017) மார்ச் 31- ஆம் தேதிக்குள் கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஆண்டு இறுதிக்குள் நேரடி மானியத் திட்டத்துடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.