ஆதாரை கட்டாயப்படுத்தக் கூடாது : இந்திய தனித்துவ அடையாள ஆணையம்

145

ஆதார் அட்டை இல்லாத மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க மறுப்பது சட்டத்துக்கு எதிரான செயல் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக யுஐடிஏஐ எனப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சில பள்ளிகளில் ஆதார் இல்லாததை காரணம் காட்டி மாணவர்கள் சேர்த்து கொள்ள மறுக்கப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆதார் இல்லாததை சுட்டிக்காட்டி, பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க மறுப்பது, சட்டத்துக்கு எதிரான செயல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆதார் இல்லாத காரணம் காட்டி மாணவர்களுக்கு, பள்ளிகளில் வேறு சலுகைகளையும் மறுக்கக் கூடாது என்றும், பள்ளி வளாகங்களில் ஆதார் பதிவு செய்தல், ஆதார் திருத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.