உச்சநீதி மன்றம் அனுமதித்தால் மட்டுமே சென்னை சிறைக்கு மாற்ற இயலும் : மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா

339

உச்சநீதிமன்றம் அனுமதித்தால் மட்டுமே சசிகலாவை பெங்களூர் சிறையில் இருந்து சென்னை சிறைக்கு மாற்ற முடியும் என மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா கருத்து தெரிவித்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறையும்,10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து மூவரும் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை, சென்னை புழல் சிறைக்கு மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியா கருத்து தெரிவித்துள்ளார். இதில்,கைதியை ஒரு மாநில சிறையில் இருந்து வேறொரு சிறைக்கு மாற்றுவது குறித்து, சம்பந்தப்பட்ட சிறைகளின் அதிகாரிகள் முடிவு எடுக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பெங்களூர் சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்றம் அனுமதித்தால் மட்டுமே அவரை பெங்களூர் சிறையில் இருந்து சென்னை சிறைக்கு மாற்ற முடியும் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.