7–வது சம்பளக்குழு பரிந்துரை அமல் செயல்திறன் அடிப்படையில் ஊதிய உயர்வா? மத்திய அரசு ஊழியர்கள் போராட்டம்!

338

புதுடெல்லி, ஜூலை. 27–
7–வது சம்பளக்குழு பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. நிகழாண்டு ஜனவரி முதல் முன்தேதியிட்டு ஊதிய உயர்வு அமலாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செயல்திறன் அடிப்படையில்தான் ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்ற விதிமுறை மத்திய அரசு ஊழியர்களிடையே கொதிப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் போராட்டம் நடத்துவது குறித்து மத்திய அரசு ஊழியர்கள் கலந்தாலோசித்து வருகிறார்கள்.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் என மொத்தம் சுமார் ஒரு கோடி பேர் உள்ளனர். ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் சம்பளத்தை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 7–வது சம்பளக் குழு அளித்த பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுவிட்டது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
ஊழியர்களுக்கு 2.57 மடங்கு ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. பணியில் சேரும் அரசு ஊழியரின் தொடக்க நிலை மாத சம்பளம் ரூ.7,000 ஆக இருந்தது. இது இப்போது ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மந்திரி சபை செயலரின் சம்பளம் ரூ.2.5லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

பாக்கி பட்டுவாடா
நிகழாண்டு ஜனவரி மாதத்திலிருந்து ஊதிய உயர்வு அமலுக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ் நிதியாண்டின் இறுதிக்குள் நிலுவை பாக்கி முழுமையாக பட்டுவாடா செய்யப்பட்டுவிடும் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:–
மத்திய அரசு ஊழியர்களுக்கான செயல்திறன் மதிப்பீட்டின் அடிப்படையில், “நன்றாகப் பணியாற்றுவோர்’ என்ற அளவையின் கீழ் தற்போது ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. வரும் காலங்களில், “மிகச் சிறப்பாக பணியாற்றுவோர்’ என்ற அளவையின் கீழ் வரும் ஊழியர்களுக்கு மட்டுமே பதவி உயர்வும், ஊதிய உயர்வும் வழங்கப்படும்.
10, 20 மற்றும் 30-ஆம் ஆண்டுகளில் ஊழியர்களின் பணி நிலை உயர்வை உறுதிசெய்யும் விதிமுறைகள், தற்போதுள்ளதைப் போலவே தொடரும்.
குறிப்பிட்ட பணி இலக்குகளை அடையாத ஊழியர்கள் அல்லது பணியில் சேர்ந்து முதல் 20 ஆண்டுகளில் அடைய வேண்டிய பதவி உயர்வை அடையாதவர்கள் ஆகியோருக்கு வருடாந்திர ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்படும்.
பொதுவாக ஜூலை 1-ஆம் தேதிதான் அரசு ஊழியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய இரு தேதிகளும் ஊதிய உயர்வை நிர்ணயிப்பதற்கான நாட்களாக இனி கருதப்படும்.
ஊழியர்களின் பணி மூப்பு, வேலைக்கு சேர்ந்த தினம் ஆகியவற்றின் அடிப்படையில் அந்த இரு தேதிகளில் ஏதாவது ஒன்றை வருடாந்திர ஊதிய உயர்வுக்கான நாளாக நிர்ணயித்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முரண்பாடு
மேலும், மத்திய அரசு ஊழியர்களின் புதிய ஊதியத்தில் நிலவும் முரண்பாடுகளைக் களைவதற்காக பிரத்யேகக் குழு ஒன்று அமைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சகத்தின் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊதிய முரண்பாட்டுக்கான தீர்வுக் குழுவை மத்திய பணியாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைக்கும் என்று அறிவிக்கை தெளிவுப்படுத்தியுள்ளது.
மிக சிறப்பாக பணியாற்றுவோர் என்பதை எந்த அடிப்படையில் துல்லியமாக நிர்ணயம் செய்வது என்ற கேள்வி எழுந்துள்ளது. உயர் அதிகாரிகளுக்கு அனுசரணையாக நடந்து கொள்பவர்கள் மட்டுமே மிகச்சிறப்பாக பணியாற்றுவோர் என்ற தகுதியை பெற முடியும் என்று ஊழியர்கள் கருதுகிறார்கள்.

காலவரையற்ற போராட்டம்
இன்சென்டிவ், செயல்திறன் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்பது பெரும்பாலான ஊழியர்களின் பணப்பயனை பறிக்கும் நடவடிக்கைதான் என்று ஊழியர்கள் குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர். மத்திய அரசின் அறிவிப்பு ஊழியர்களிடையே கொதிப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் முதல் கட்டமாக ஒரு நாள் போராட்டம் நடத்துவது குறித்து ஊழியர்கள் கலந்து ஆலோசித்து வருகின்றனர்.
இதை மத்திய அரசு கண்டுகொள்ளாவிட்டால் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை என்று அதிருப்தியால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.